லாரியில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் போலி மதுபானம் பறிமுதல் ஒருவர் கைது


லாரியில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் போலி மதுபானம் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2018 10:45 PM GMT (Updated: 1 Dec 2018 9:26 PM GMT)

இலுப்பூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போலி மதுபானம் இருந்த பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

திண்டிவனத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு போலி மதுபான பாட்டில்கள் லாரியில் கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, புதுக்கோட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, சப்-இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் இலுப்பூர் அருகே உள்ள நெடுங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டிவனத்தில் இருந்து வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் பெட்டி பெட்டியாக போலி மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் வந்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் குரும்புரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சரவணனை(வயது 39) கைது செய்து புதுக்கோட்டை மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் 122 பெட்டிகளில் சுமார் 5 ஆயிரத்து 856 மதுபான பாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் இருக்கும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்கள் அனைத்திலும் இருந்தது போலி மதுபானம் என்றும் மது விலக்கு போலீசார் தெரிவித்தனர்.

Next Story