உசிலம்பட்டி அருகே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்


உசிலம்பட்டி அருகே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:00 AM IST (Updated: 2 Dec 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ளது நக்கலப்பட்டி காலனி. இங்கு 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த காலனி அருகில் மதுரை–போடி ரெயில் பாதை செல்கிறது. தற்போது அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நக்கலப்பட்டி காலனிக்கு செல்ல வேண்டும் என்றால், தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் காலனிக்கு சாலை அமைக்கப்படவில்லை.

இதனால் காலனிக்கு செல்லும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று நக்கலப்பட்டி காலனி பகுதியில் அகல ரெயில் பாதைக்காக தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், தண்டவாளத்தை கடந்து காலனிக்கு செல்லும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட எந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு தண்டவாளம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கிராம மக்கள் போராட்டம் குறித்து அறிந்த உசிலம்பட்டி தாசில்தார் ராஜன், ரெயில்வே என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நக்கலப்பட்டி காலனிக்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story