புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியும்; கட்சியினருக்கு, தேர்தல் பொறுப்பாளர் வேண்டுகோள்


புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியும்; கட்சியினருக்கு, தேர்தல் பொறுப்பாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Dec 2018 12:15 AM GMT (Updated: 1 Dec 2018 11:29 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர, கட்சி தொண்டர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தேர்தல் பொறுப்பாளர் சபாபதி மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை வடக்கு மாநில தி.மு.க. சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஜீவா ருக்மணி திருமண மண்டபத்தில் புதுவை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பலராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பேசினார். முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தில் புதுவை மாநில தேர்தல் பொறுப்பாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சபாபதி மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அமைச்சராகவும் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

புதுவை மாநிலத்தின் அமைப்பாளர்களான சிவா, சிவக்குமார், நாஜிம், மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து இணைந்து செயல்பட்டால் புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை அமைக்க முடியும். எனவே தொகுதி வாரியாக வருகிற 20-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.வினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நானும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நமது விடா முயற்சியில் புதிய அத்தியாயத்தை படைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story