திண்டுக்கல் அருகே, லாரி மீது கார் மோதல்: அரசு ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் பலி - நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது பரிதாபம்


திண்டுக்கல் அருகே, லாரி மீது கார் மோதல்: அரசு ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் பலி - நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் உள்பட 4 பேர் பலியாகினர். நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாது:-

தாடிக்கொம்பு, 

கர்நாடக மாநிலம் பெங்களூரு குருபரஹல்லி பகுதியை சேர்ந்தவர்கள் லோகேஷ் (வயது 31), மஞ்சுநாதன் (31), ஜோதிபாபு (31). இவர்கள் அனைவரும் நண்பர்கள். இதில், லோகேஷ் கர்நாடக அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். இவர்களுடைய நண்பர் ஒருவரின் திருமணம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக, நேற்று முன்தினம் இரவு லோகேஷ் உள்பட 3 பேரும் ஒரு காரில் பெங்களூருவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு புறப்பட்டனர். லோகேசின் உறவினர் ஹரீஷ் (23) என்பவர் காரை ஓட்டினார். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றினார்.

கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நேற்று காலை 6 மணி அளவில் கார் வந்து கொண்டிருந்தது. திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு மேம்பாலத்தில் வந்தபோது, காருக்கு முன்னால் 2 லாரிகள் சென்றுகொண்டு இருந்தன. இதனால் கார் டிரைவர் ஹரீஷ், அந்த லாரிகளை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார், லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி லோகேஷ் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரை ஓட்டிய டிரைவர் ஹரீஷ் இருக்கையிலேயே உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், தயாநிதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், கார் உருக்குலைந்து காணப்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காரை உடைத்து உடல்களை மீட்டனர். காரில் வந்த 4 பேரும் இறந்ததால், அவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அப்போது, டிரைவரின் சட்டை பாக்கெட்டுக்குள் ஆதார் அட்டை இருந்துள்ளது.

அதில், ஹரீஷ் என்றும் அவருடைய முகவரியும் இருந்தது. அதை வைத்து தான் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அதன்பின்னர் தான், இறந்தவர்களின் பெயர் விவரம் தெரிய வந்தது. விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story