கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Dec 2018 4:15 AM IST (Updated: 3 Dec 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்தேசிய பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தஞ்சாவூர்,

தமிழ்தேசிய பேரியக்கத்தின் 8-வது பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்தை தலைவர் மணியரசன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டசெயலாளர் வைகறை வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட இந்திய அரசின் நீர்வள ஆணையம் கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி இருப்பது சட்ட விரோத செயல் ஆகும். இது தமிழர் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியது போல் உள்ளது. புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பாசனம் பெறும் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும். 20 மாவட்டங்களில் காவிரி குடிநீர் முற்றிலும் நின்று போகும். மக்களின் உயிர்வாழ்வும் கேள்விக்குறியாகும்.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்த மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும். இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அவ்வாறு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கா விட்டால் தமிழர்கள் அடுக்கடுக்காக மேகதாது பகுதிக்கு சென்று அணிஅணியாக அறப்போர் கொரில்லாக்களாக மறியல் செய்து அணைகட்டும் பணியை தடுக்க வேண்டும் என்று அனைத்து தமிழ் மக்களையும் கேட்டுக்கொள்வது. உயிரை பணயம் வைத்து இந்த கொரில்லா அறப்போட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வது.

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் குவிகிறார்கள். மேலும் மத்திய அரசு திட்டமிட்டு வருமானவரித்துறை உள்ளிட்ட துறைகளிலும் மோசடி செய்து வெளிமாநிலத்தவர்களை அதிகம் நியமிக்கிறார்கள். தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் 10 சதவீதம் பேர் தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் உள்ளவர்களை வெளியேற்றவேண்டும். மேலும் வெளிமாநிலத்தவரை வெளியேற்றக்கோரி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், வெளிமாநில தொழிலாளர்களை திரும்பிப்போங்கள் என்று வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அறப்போராட்டம் நடத்த உள்ளோம்.

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியானது. ஆனால் அதன் பின்னர் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இன்சூரன்சு மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய இழப்பீடு வழங்கி மறுவாழ்வுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story