அ.ம.மு.க. நிர்வாகி மாமூல் கேட்டு மிரட்டுகிறார்; நடவடிக்கை எடுக்கக்கோரி இறைச்சிக்கடை வியாபாரிகள் புகார்
மாமூல் கேட்டு மிரட்டும் அ.ம.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறைச்சிக்கடை வியாபாரிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
பெரிய அக்ரஹாரம், கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த 15–க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடை வியாபாரிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக பெரிய அக்ரஹாரம் மற்றும் கனிராவுத்தர்குளம் பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறோம். நாங்கள் சுத்தமான, சுகாதாரமான முறையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்து வருகிறோம்.
எங்கள் பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக கழக நிர்வாகி ஒருவர் அடிக்கடி வந்து கட்சி கொடி ஏற்ற வேண்டும், கூழ் ஊற்ற வேண்டும் என்று கூறி எங்களிடம் மாமூல் கேட்டு தொல்லை கொடுக்கிறார். நாங்களும் பலமுறை அவருக்கு மாமூல் கொடுத்துள்ளோம்.
இந்த நிலையில் நேற்று காலை அ.ம.மு.க. நிர்வாகி வந்து ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். நாங்கள் கொடுக்க முடியாது என்று கூறினோம். அதற்கு அவர் என்னை எதிர்த்தால் தொடர்ந்து இங்கு கறிக்கடை நடத்த முடியாது என்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் தொடர்ந்து இறைச்சிக்கடை நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.