கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி தலைநகரங்களில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி தலைநகரங்களில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்கக் கோரி வருகிற 13-ந் தேதி அனைத்து ஒன்றியத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாகி உடையப்பன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் பேசினார். கூட்டத்தில் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. புயல் பாதிப்பால் மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயம் முற்றிலும் நாசமாகிவிட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும். 6 மாதத்திற்கான மின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். பயிர் காப்பீட்டுக்கான கால அளவை நீட்டிப்பதோடு, காப்பீடுக்கான பிரிமியத்தை அரசே ஏற்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளுக்கு மைக்ரோ மைனான்ஸ், சுய உதவிக்குழு, விவசாய கடன், வங்கி கடன் உள்பட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

13-ந் தேதி ஆர்ப்பாட்டம்

விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் தென்னை, மா, பலா, முந்திரி சாகுபடிகளுக்கு 5 ஆண்டிற்கு ஆகும் செலவை அரசே ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். குடிசை, ஓட்டு வீடுகளுக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய தலைநகரங்களிலும் விவசாயிகளை திரட்டி வருகிற 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது. வருகிற 5-ந் தேதி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story