கோவில் விழாவில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 38 பேருக்கு வாந்தி-மயக்கம்


கோவில் விழாவில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 38 பேருக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 2 Dec 2018 11:00 PM GMT (Updated: 2 Dec 2018 8:46 PM GMT)

முசிறி அருகே கோவில் விழாவில் பிரசாதம் சாப்பிட்ட 17 குழந்தைகள் உள்பட 38 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

முசிறி,

முசிறியை அடுத்த உமையாள்புரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு கம்மங்கூழ், தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் பிரசாதம் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 17 குழந்தைகள் உள்பட 38 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வயிற்றுவலி அதிகமாக இருந்த ஒரு சிலர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட கூழ் மற்றும் தயிர்சாதம் ஒவ்வாமை காரணமாக வாந்தி-மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் முசிறி தாசில்தார் சுப்பிரமணியன், போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன், இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர் வடிவேல், வட்டார சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் கம்மங்கூழ் மற்றும் தயிர்சாதம் ஆகியவற்றை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோவிலில் பிரசாதம் வழங்கிய மணி என்பவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story