குளச்சல் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை


குளச்சல் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2018 3:45 AM IST (Updated: 3 Dec 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குளச்சல்,

குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் மிக்கேல் ஸ்டார்பின் (வயது35), மீனவர். இவருக்கு மேரி மஜோரா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மிக்கேல் ஸ்டார்பினுக்கு மது பழக்கம் உண்டு. சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று மிக்கேல் ஸ்டார்பின் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்தார். அதை அவரது மனைவி கண்டித்தார். இதனால், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மிக்கேல் ஸ்டார்பின் வீட்டின் மாடியில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மிக்கேல் ஸ்டார்பினின் பிணம் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது.

இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story