ஜாக்டோ–ஜியோ நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசுப்பணியாளர் சங்கம் பங்கேற்காது; பொதுக்குழு கூட்டத்தில் முடிவு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்றது.
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் பரவையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெறுவதால் ஜாக்டோ–ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் டிசம்பர் மாதம் வரை பங்கேற்கமாட்டோம். அரசு ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. வருகிற 29, 30–ந் தேதிகளில் கடலூரில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம்.
ஜனவரி மாதம் முதல் ஜாக்டோ–ஜியோ அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று முழு ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.