திருவண்ணாமலையில் பரபரப்பு சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய தம்பதி கைது வீட்டிற்கும் ‘சீல்’ வைப்பு


திருவண்ணாமலையில் பரபரப்பு சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய தம்பதி கைது வீட்டிற்கும் ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 3 Dec 2018 5:00 AM IST (Updated: 3 Dec 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் வீட்டில் சட்டவிரோதமாக செயல்பட்ட கருக்கலைப்பு மையத்துக்கு ‘சீல்’ வைக்கப் பட்டது. இது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிப்பது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து கருக் கலைப்பு செய்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள ‘ஸ்கேன்’ மையங்களில் இந்த சட்டத்தை மீறி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியப் பட்டு அறிவிப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்படுவ தாகவும் வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து, சில ஸ்கேன் மையங்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

இந்த நிலையில் திருவண்ணா மலையில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ‘திடீரென’ அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு கணவன், மனைவி உள்பட 3 பேரை கைது செய்தனர். அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை நகரையொட்டிய வேங்கிக்கால் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 52). இவர் சென்னை முகப்பேரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (50). இவர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் வீடு உள்ளது. அந்த வீட்டில், ஆனந்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சட்ட விரோதமாக கண்டறிந்து சொல்வதாகவும், பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை ஊரகம் மற்றும் சுகாதார நலப்பணிகள் இயக்ககத்தை சேர்ந்த பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவிற்கு புகார்கள் வந்தன.

இதுகுறித்து மாநில கண்காணிப்பு குழுவினர் திருவண்ணாமலைக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட சுகாதார பணிகள் அலுவலர் களிடம் தெரிவிக்காமல் ஆனந்தியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

ஆனந்தி 12-ம் வகுப்பு படித்து விட்டு தொலைதூர கல்வி மூலம் நர்சிங் படித்து உள்ளதும், அவரது வீட்டில் வைத்து கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக் கலைப்பு செய்வதும் உறுதி செய்யப் பட்டது. அவர் இரவு நேரங்களில் மட்டுமே இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மாநில கண்காணிப்பு குழுவினர் ஆனந்தியை கையும், களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். இதற்காக கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து கருக்கலைப்பு செய்ய ஆனந்தி வீட்டிற்கு ரகசியமாக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த கர்ப்பிணி ஆனந்தி வீட்டிற்கு சென்றார்.

அங்கு கருக்கலைப்பு செய்ய ஆனந்தி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மாநில கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், ரேடியோலாலஜி டாக்டர் நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பாண்டியன் மற்றும் குழுவினர் அங்கு திடீரென புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் உள்ள ரகசிய அறையில் வைத்து அந்த கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற போது ஆனந்தியை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.

மேலும் அங்கு ஸ்கேன் செய்வதற்காக வைத்திருந்த லேப்டாப் போன்ற கருவி உள்பட பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து அந்த ரகசிய அறையில் சோதனை செய்தனர். அங்கிருந்த ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தனர்.

அதில் பெண்களின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது, போன்ற பல்வேறு அறிக்கைகள் இருந்தன. இதன்மூலம் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்களும் சிக்கியது.

ஆனந்திக்கு உடந்தையாக அவரது கணவர் தமிழ்செல்வன் மற்றும் திருவண்ணாமலை செட்டிகுளம்மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆட்டோ டிரைவர் சிவக்குமார், ஆனந்தியின் வீட்டிற்கு கருக்கலைப்பிற்காக வரும் பெண்ணை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கும், வீட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கும் அழைத்து செல்லும் புரோக்கர் போன்று செயல்பட்டு வந்துள்ளார். மேலும் அவர் ஆனந்தியின் வீட்டிற்கு வருபவர்களிடம் ஆட்டோ கட்டணமாக ரூ.2 ஆயிரம் பெற்று கொண்டு, அங்கு எப்படி செல்கிறோம் என்று தெரியாத அளவிற்கு ஊரை சுற்றி கொண்டு அழைத்து சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, தமிழ் செல்வன், சிவக்குமார் ஆகி யோரை கைது செய்தனர்.

முன்னதாக சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்த ஆனந்தியின் வீட்டிற்கு மாநில கண்காணிப்பு குழுவினர் ‘சீல்’ வைத்தனர். இதனால் வேங்கிக்கால் பகுதி பரபரப்பாக காணப் பட்டது.

Next Story