வந்தவாசி அருகே இருந்து பிரமாண்ட பெருமாள் சிலை பெங்களூருவுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு


வந்தவாசி அருகே இருந்து பிரமாண்ட பெருமாள் சிலை பெங்களூருவுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு
x
தினத்தந்தி 3 Dec 2018 4:57 AM IST (Updated: 3 Dec 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே கற்பாறையில் 64 அடி உயர பிரமாண்ட பெருமாள் சிலையை கார்கோ லாரிகள் மூலம் பெங்களூரு எடுத்துச் செல்லும் பணிகள் நடந்து வருகிறது.

வந்தவாசி,

பெங்களூரு ஈஜிபுரம் கோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளைக்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் விநாயகர், வீரஆஞ்சநேயர், நவக்கிரகம், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியன் உள்பட பல்வேறு சாமிகளின் சன்னதிகள் உள்ளன.

இக்கோவிலில் ஒரே கல்லில் பிரமாண்டமாக பெரிய அளவில் விஸ்வரூப கோதண்டராம சுவாமி (பெருமாள்) சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சிலை 7 தலை கொண்ட ஆதிசேஷபாம்பு சிலை, பீடத்துடன் சேர்த்து 108 அடி உயரம் கொண்டதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.

வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு மலைக்குன்றின் அருகில் இதற்கான கற்பாறை இருப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கற்பாறை அறுத்து எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்த பெரிய கற்பாறையில் விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை 11 முகங்களுடன், 22 கைகளுடன், சங்கு, சக்கரம் செதுக்கப்பட உள்ளது. தற்போது சாமியின் பெரிய நடுமுகம் செதுக்கப்பட்டது.

இந்த பாறை மற்றும் சிலை வைப்பதற்கான பீடத்திற்கான 230 டன் எடையுள்ள பாறை ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெரிய பாறையை எடுத்துச் செல்ல 170 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர் மற்றும் சிறிய பாறையை எடுத்துச் செல்ல 90 டயர்கள் கொண்ட கார்கோ டிரெய்லர் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாறைகளை டிரெய்லரில் வைக்க தேவையான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாறையின் அழுத்தம் தாங்காமல் டயர்கள் வெடித்ததால் அப்போது எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 2 பாறைகளின் பக்கவாட்டு பகுதிகளை செதுக்கி எடை குறைக்கும் பணியில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். மேலும் பெருமாளின் நடுமுகம் செதுக்கப்பட்டதுடன், சங்கு, சக்கரம் ஆகியவை மட்டும் செதுக்கப்பட்டது.

முதல்கட்டமாக சாமி முகம் செதுக்கப்பட்ட கற்பாறையை பெங்களூருவுக்கு கொண்டு் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த வாரம் 240 டயர்கள் கொண்ட கார்கோ டிரக், இழுவை வாகனங்கள் கொண்டு வரப்பட்டு அதில் சாமி சிலை செய்வதற்கான பாறை ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கார்கோ டிரக்கை அந்த பகுதியில் இருந்து சாலைக்கு கொண்டு வருவதற்காக இழுவை வாகனங்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது,

கடந்த 2 நாட்களில் சுமார் 100 அடிக்கு டிரக் நகர்ந்துள்ளது. மேலும் டிரக்கை இழுவை வாகனங்கள் மூலம் இழுக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story