சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 3:30 AM IST (Updated: 4 Dec 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை இடுக்குபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 38). இவர் அடிஅண்ணாமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 2013-ம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த பள்ளியில் தனியார் குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமி ஆதரவற்றவர் ஆவார்.

அதனால் அவர் சிறுவயதில் இருந்தே அந்த குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்துள்ளார். சவுந்திரராஜன் அந்த சிறுமிக்கு பள்ளியில் வைத்து பலமுறை பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்து உள்ளார். மேலும் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சவுந்திரராஜன், சிறுமியிடம் உன்னை 8-ம் வகுப்பில் ‘பெயில்’ ஆக்கிவிடுவேன் என்று மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார்.

அன்று இரவு அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமி தன்னை காப்பகத்தில் விடுமாறு கூறி அழுதுள்ளார். பின்னர் சவுந்திரராஜன் அந்த சிறுமியை மறுநாள் அதிகாலையில் காப்பகத்திற்கு வெளியில் விட்டு சென்று உள்ளார். சிறுமி காப்பகத்தின் சுற்றுச் சுவரை தாண்டி உள்ளே குதித்து சென்றார்.

இதைகண்ட காப்பகத்தின் வார்டன் சிறுமியை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது ஆங்கில ஆசிரியர் சவுந்திரராஜன் வீட்டிற்கு சென்றதும், அங்கு நடந்த சம்பவத்தையும் கூறியுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திரராஜனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா ஆஜரானார்.

இந்த வழக்கை நீதிபதி நடராஜன் விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சவுந்திரராஜனுக்கு ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மூலம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார்.

Next Story