வாசுதேவநல்லூர் அருகே விபத்தில் தந்தை பலி: 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் பாராட்டு


வாசுதேவநல்லூர் அருகே விபத்தில் தந்தை பலி: 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 4 Dec 2018 5:00 AM IST (Updated: 4 Dec 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே விபத்தில் தந்தை பலியானதால் பரிதவிக்கும் 3 குழந்தைகளின் உணவு மற்றும் கல்விச்செலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வாசுதேவநல்லூர், 

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மலையடிக்குறிச்சி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டூர்சாமி (வயது 38). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி (38). இவர்களுக்கு மகாலட்சுமி (14), கார்த்திகா (7) என்ற மகள்களும், ரஞ்சித்குமார் (12) என்ற மகனும் உள்ளனர். மகாலட்சுமி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ரஞ்சித்குமார், மலையடிக்குறிச்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், அங்குள்ள தொடக்கப்பள்ளியில் கார்த்திகா 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்த குடும்பம் கோட்டூர்சாமியின் உழைப்பை நம்பியே இருந்து வந்தது. கோட்டூர்சாமி கடந்த மாதம் 29-ந்தேதி வேலைக்காக தலைவன்கோட்டைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மினிவேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோட்டூர்சாமியின் மனைவி செல்வி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரையில் விழுந்ததில், அவரது இடது கை செயலிழந்தது. இருப்பினும், அவர் தன்னால் இயன்ற வேலைகளை செய்து வருகிறார். விபத்தில் தனது கணவர் இறந்ததாலும், தனது குடும்பம் வறுமையில் வாடுவதாலும் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? என்று தெரியாமல் செல்வி வேதனையில் தவித்தார்.

இதை அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், திக்கற்ற நிலையில் இருக்கும் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்து உள்ளார். அதாவது அந்த குழந்தைகளுக்கு உணவு மற்றும் மேல்படிப்பு வரை கல்விச்செலவை ஏற்றுக் கொள்வதாக கோட்டூர்சாமியின் தம்பி சரவணனிடம் தெரிவித்தார்.

தனது குழந்தைகளுக்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேலை செல்வி மற்றும் அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர். மேலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த நடிகர் சிங்கம்புலியும், கோட்டூர்சாமி குடும்பத்துக்கு உதவிடும் வகையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் ரூ.6 ஆயிரத்து 150 வசூலித்து அதை இன்ஸ்பெக்டர் ஆடிவேலிடம் வழங்கினார். மேலும் மாவட்ட கலெக்டர் ஷில்பா, போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோரும் ஆடிவேலை போனில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

Next Story