கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் மனு


கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 4 Dec 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தனியார் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரக்கோரி அதன் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 250 கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புலியூர் அம்பேகத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியிலுள்ள வீடுகளில் இருந்து முறையாக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி இல்லை. இதனால் தெரு பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியும் பெருகி வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

தாந்தோன்றி ஒன்றியம் காந்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள், பெற்றோர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பள்ளியின் நடுவில் உள்ள விளையாட்டுதிடலை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் அந்த இடத்தை சிலர் வேலியிட்டு ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னமநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவர் ஒருவரை பள்ளி ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த மாணவரின் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.

ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கொடுத்த மனுவில், கரூர் மண்மங்கலத்திலுள்ள வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இலகுரக மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் பெற வாகனத்தினை ஓட்டி காண்பிக்கும் சோதனை தாந்தோன்றிமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டணத்தில் அரசு பஸ்பாஸ் வழங்கியுள்ளது. அனைத்துவித அரசு பஸ்களிலும் இதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் வையாபுரி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களிலுள்ள கிளைகளில் கரூரை சேர்ந்த பலர் முகவர்களாக பணியாற்றினர். அப்போது மாத தவணையாக ரூ.240 முதல் ரூ.10 ஆயிரம் வரை 6 ஆண்டுகள் செலுத்தினால் பின்னர் இரட்டிப்பு தொகை கிடைக்கும் எனவும் அல்லது அதற்கு ஈடாக நிலம் வழங்கப்படும் எனக்கூறி அந்த நிதி நிறுவனம் சார்பில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் விதிகளுக்கு மாற்றாக இந்த நிறுவனம் செயல்படுவதாக கூறி செபி ஆணையத்தால் அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்த மக்கள் அதன் முகவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுப்பதால் தற்கொலை முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே அந்த தனியார் நிறுவனத்தினடமிருந்து செலுத்திய பணத்தை மீண்டும் கரூர் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நிறுவன முகவர்கள், பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Next Story