10-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி ஏராளமானவர்கள் பங்கேற்பு


10-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி ஏராளமானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:00 AM IST (Updated: 4 Dec 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவையொட்டி நேற்று அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது. திருவிழாவை காண ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள். விழாவில் கடைசி 3 நாட்கள் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதே போல 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவில் தேர் பவனி நடந்தது. அப்போது தேரின் பின்னால் மக்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.

இந்த நிலையில் 10-ம் திருவிழா நேற்று பகலில் தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் வைக்கப்பட்டு இருந்த 4 தேர்கள் வீதிகளில் வலம் வந்தது. பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக கேப் ரோட்டுக்கு வந்து பின்னர் மீண்டும் பேராலயம் சென்றது. அப்போது அந்தந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். கூட்டத்தின் மத்தியில் தேர் ஆடி அசைந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் மாலையில் தேர்கள் மீண்டும் நிலைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது.

முன்னதாக காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது.

10-ம் திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்தில் குவிந்தனர். தேர் பவனியையொட்டி பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடுகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த சாலைகளில் எல்லாம் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story