புயல் பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு


புயல் பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:30 AM IST (Updated: 4 Dec 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் குமரி மாவட்ட வளர்ச்சிக்கான வாழ்வாதார கோரிக்கை மாநாடு நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார்.

தேர்தல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், அகமது உசேன், பெல்லார்மின், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தேர்தல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் 15 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு யானை பசிக்கு சோளப்பொரி போன்று 357 கோடி ரூபாய் மட்டும் அறிவித்திருக்கின்றது. மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. எனவே தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கஜா புயல் பாதிப்புகளை இதுவரை பிரதமர் நரேந்திரமோடி வந்து பார்வையிட வரவில்லை. இது மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. மாநில அரசு உள்ளாட்சி தேர்தலை கடந்த 2 வருடங்களாக நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது. புயலை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைப்பதாக மாநில அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குமரி மாவட்ட வளர்ச்சிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொல்லங்கோடு, பளுகல், சுசீந்திரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து நடைபயணமும், 19-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story