கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது போலீசிடம் சிக்கினார்


கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது போலீசிடம் சிக்கினார்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:45 PM GMT (Updated: 3 Dec 2018 10:14 PM GMT)

சுசீந்திரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவுடன் அவர் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

மேலகிருஷ்ணன்புதூர்,

நைனாபுதூர் அருகே சேதுபதியூரை சேர்ந்தவர் பாரதி (வயது 44). இவர் கடந்த மாதம் 9-ந் தேதி காலை தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல், கடந்த 1-ந் தேதி கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்த ஜெய்லானி (28) என்பவர், தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை சுசீந்திரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அருகில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு பகுதியில் நேற்று காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஈத்தாமொழியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் வேகமாக வருவதை போலீசார் கண்டனர்.

உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். ஆனால், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (23) என்பதும், சேதுபதியூரை சேர்ந்த பாரதி, கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்த ஜெய்லானி ஆகியோரது மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. மேலும், போலீசார் அவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர் மீது சுசீந்திரம், கருங்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கும், வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளன. கொலை வழக்கில் சிறையில் இருந்த அவர் கடந்த மாதம் 2-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. ஜாமீனில் வெளியே வந்தவுடன் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும், அந்த வாகனத்தில் வலம் வந்த போது அவர் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

மேலும் அவர் நேற்று முன்தினம் காலை சுசீந்திரம் அருகே பல்பநாபன்புதூரை சேர்ந்த வின்சென்ட் (49) மிரட்டி ரூ.500-ஐ பறித்துள்ளார். அதை தொடர்ந்து போலீசார் அரவிந்த்தை கைது செய்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story