ஏரியூரில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ஏரியூரில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:21 AM IST (Updated: 4 Dec 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சியில் ஏரியூர், கூர்காம்பட்டி, தண்டா, ஈச்சப்பாடி, காமராஜப்பேட்டை, பெல்லூர் உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. இதில் ஏரியூர் கிராமத்தில் சுமார் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏரியூர் பென்னாகரம்– மேச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது.

இந்த சாலையை விரிவுப்படுத்தும் பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது, குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்தது. இதனால் கடந்த 8 மாதங்களாக ஏரியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனையடுத்து கிராமமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமமக்கள் குடிநீருக்கு பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

குடிநீர் குழாயை சீரமைத்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் 200–க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று பென்னாகரம்–மேச்சேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களையும் கிராமமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்தில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக பென்னாகரம்–மேச்சேரி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story