கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி


கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2018 11:03 PM GMT (Updated: 3 Dec 2018 11:03 PM GMT)

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக குதிரை பேர ஆடியோ பதிவு ஒன்று குமாரசாமிக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தனது குடும்பத்துடன் மல்லேசுவரத்தில் உள்ள காடு மல்லேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது. பா.ஜனதாவின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

நாங்கள் நல்லாட்சியை நடத்தி வருகிறோம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை.

அதனால் இங்கு வந்து காடு மல்லேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டேன். கர்நாடக மக்களுக்கு நல்லது நடைபெறட்டும் என்று இறைவனிடம் வேண்டினேன். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story