குடியாத்தம் அருகே மணல் எடுக்க எதிர்ப்பு: மாட்டு வண்டிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் மீண்டும் போராட்டம்
குடியாத்தம் அருகே மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மாட்டு வண்டிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் அருகே பட்டு கிராமத்தை ஒட்டியபடி உள்ள பாலாற்றில் கடந்த ஜூலை மாதம் முதல் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் குடியாத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் தினமும் மணல் அள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பட்டு, ஆலாம்பட்டறை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கடந்த 1-ந் தேதி காலையில் மணல் குவாரி இயங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது மணல் குவாரிகளில் மணல் எடுத்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து மணல் எடுப்பது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மணல் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் மணல் குவாரியில் மணல் எடுக்க மாட்டு வண்டிகள் வந்தன. அப்போது பொதுமக்கள் மாட்டு வண்டிகளை முற்றுகையிட்டு, மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீராதாரம் குறைந்து வருவதாகவும், அளவுக்கு அதிகமாக சுடுகாட்டு பகுதியையும் விட்டு வைக்காமல் மணல் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கனிமவள உதவி இயக்குனர் ரமேஷ், நீர்வள ஆதார துறை உதவி பொறியாளர் கண்ணன், தாசில்தார் கோட்டீஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணல் குவாரிக்கு உரிய எல்லைகளை ஓரிரு நாட்களில் நிர்ணயம் செய்யப்பட்டு அதன்பின்னர் மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story