திருமணமான 2 வாரத்தில் கல்லூரி ஆசிரியை, மாணவருடன் ஓட்டம்


திருமணமான 2 வாரத்தில் கல்லூரி ஆசிரியை, மாணவருடன் ஓட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 4 Dec 2018 8:33 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே திருமணமான 2 வாரத்தில் கல்லூரி ஆசிரியை, மாணவருடன் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண், ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்தனர்.

அதன்படி, கடந்த 2 வாரங்களுக்கு  முன்பு ஆசிரியைக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் அன்று இரவு, ஆசிரியை தனது கணவரிடம் தனக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் இருப்பதாகவும், அவரை மிகவும் விரும்புவதாகவும், பெற்றோர் தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார். இதைகேட்டு மணமகன் அதிர்ச்சி அடைந்தார்.

மறுநாள் மணமகன் ஆசிரியையை அழைத்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு ஆசிரியையின் பெற்றோரிடம்,  உங்கள் மகளுக்கு ஏற்கனவே ஒருவருடன் காதல் இருப்பதாகவும், இதனை தன்னிடம் கூறி அழுததாகவும், எனவே இனி ஆசிரியையுடன் வாழ விரும்பவில்லை என்றும் கூறினார். பின்னர் ஆசிரியையை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு அவர் மட்டும் திரும்பி சென்றுவிட்டார்.

இந்தநிலையில் திருமணம் முடிந்து 2 வாரங்கள் கடந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த ஆசிரியை திடீரென மாயமானார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியைக்கும், அவர் பணிபுரிந்து வரும் கல்லூரியில் படிக்கும் 20 வயதுடைய மாணவருக்கும் இடையே காதல் இருந்தது தெரிய வந்தது. தற்போது ஆசிரியை மாணவருடன் ஓட்டம் பிடித்ததும் உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story