கூடலூர் அருகே: காட்டுயானை துரத்தியதில் கீழே விழுந்து வன காப்பாளர் படுகாயம்


கூடலூர் அருகே: காட்டுயானை துரத்தியதில் கீழே விழுந்து வன காப்பாளர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டுயானை துரத்தியதில் கீழே விழுந்து வன காப்பாளர் படுகாயம் அடைந்தார்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் 9 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. அவை கடைகள், வீடுகளை இரவில் இடித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓவேலி வனச்சரக அலுவலகத்தை காட்டுயானைகள் முற்றுகையிட்டு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. அப்போது அலுவலகத்தில் இருந்த வன காப்பாளர் சேகர் உள்பட 3 ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு குயின்ட் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் இரவு ரோந்து பணியில் இருந்த வன காப்பாளர் சேகர் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென ஒரு காட்டுயானை ஆக்ரோஷத்துடன் வனத்துறையினரை நோக்கி ஓடி வந்தது. இதை கண்ட வனத்துறையினர் தேயிலை தோட்டத்துக்குள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது வன காப்பாளர் சேகரை காட்டுயானை துரத்தியது. இதனால் பயத்தில் அலறியடித்தவாறு அவர் ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இருப்பினும் உயிர் பிழைப்பதற்காக எழுந்து ஓடிய வன காப்பாளர் சேகர், அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வனத்துறையின் ரோந்து வேனுக்குள் சென்று பதுங்கினார்.

ஆனால் வேனுக்குள் பதுங்கிய சேகரை காட்டுயானை பார்க்கவில்லை. இதனால் வேனை கடந்தவாறு காட்டுயானை பிளிறிக்கொண்டே சேகரை தேடி ஓடியது. அதன்பின்னரே வனத்துறையினர் மற்றும் படுகாயங்களுடன் உயிர் தப்பிய வன காப்பாளர் சேகர் ஆகியோர் நிம்மதி அடைந்தனர். பின்னர் சேகரை சக வனத்துறை ஊழியர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story