நீலகிரி மாவட்டத்தில்: 135 அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் அவதி


நீலகிரி மாவட்டத்தில்: 135 அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 5 Dec 2018 3:30 AM IST (Updated: 5 Dec 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 135 அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நீலகிரியில் அரசு மருத்துவமனைகளில் 45 டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 90 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நீலகிரி முழுவதும் நேற்று 135 அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணியை புறக்கணித்ததோடு, மருத்துவமனை, சுகாதார நிலையங்களுக்கு செல்லவில்லை.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் பணியில் இல்லாததால், சிகிச்சை பெற வந்த நோயாளிகள் காத்திருந்தனர். இதனால் அவர்கள் அவதி அடைந்தனர். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரவிக்குமார், துணை இயக்குனர் நிர்மலா, மருத்துவ ஜெய்கணேஷ் ஆகிய 3 பேர் புறநோயாளிகள் 300 பேருக்கு சிகிச்சை அளித்தனர். அதேபோல் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் வெகு நேரம் காத்திருந்தனர்.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா தலைமை ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாததால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மருத்துவ பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் ஒரு டாக்டர் பணியாற்றினார். போதிய டாக்டர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Next Story