உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத ஓட்டலுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை


உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத ஓட்டலுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2018 10:15 PM GMT (Updated: 4 Dec 2018 8:50 PM GMT)

புதுக்கோட்டையில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பகுதியில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் தங்கும் அறைகள் உள்ளன. இந்நிலையில் ஓட்டலில் காலாவதியான உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டலில் மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு சுமார் 6 கிலோ எடையுள்ள காலா வாதியான அசைவ உணவுகள் அழுகிய நிலையில் குளிர்சாதன பெட்டியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டல் பணியாளர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக ஓட்டல் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று காலையில் மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பிரபல தனியார் ஓட்டலில் உள்ள பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு நிருபர்களிடம் கூறுகையில், எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் ஓட்டலில் சோதனை செய்தோம். அப்போது காலாவதியான அசைவ உணவுகள் அழுகிய நிலையில் குளிர்சாதன பெட்டியில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் இந்த ஓட்டலை உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் நடத்தி வந்தனர். இது குறித்து கலெக்டர் கணேஷிடம் தெரிவித்து, அவரது அறிவுறுத்தலின்படி சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டலுக்கு சீல் வைத்து உள்ளோம். இந்த ஓட்டலில் உள்ள தங்கும் விடுதி வழக்கம்போல் இயங்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவீதம் ஓட்டல்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று உள்ளன. நாங்கள் பல முகாம்கள் நடத்தி உணவு பாதுகாப்பு உரிமம் கொடுத்து வந்தோம். இருப்பினும் சிலர் இன்னும் உணவு பாதுகாப்பு உரிமம் வாங்காமல் ஓட்டல்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story