சாத்தனூர் அணையில் திருட்டுத்தனமாக மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மீன்பிடி சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு


சாத்தனூர் அணையில் திருட்டுத்தனமாக மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மீன்பிடி சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணையில் திருட்டுத்தனமாக மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்பிடி சங்கம் சார்பில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

சாத்தனூர் அணை பங்கு மீனவர் கூட்டுறவு விற்பனை சங்க உறுப்பினர் மற்றும் சாத்தனூர் அணையில் மீன் பிடிக்கும் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சாத்தனூர் அணை மற்றும் மல்லிகாபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் சாத்தனூர் அணையில் கடந்த 65 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மீன் வளத்துறையினரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக சாத்தனூர் அணையினை சுற்றி உள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள் திருட்டுத்தனமாக மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயலானது தமிழ்நாடு அரசாங்க மீன்வள சட்டத் திட்டங்களுக்கு எதிரான செயலாகும். இதனால் எங்களுடைய பூர்வீக வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. திருட்டு மீன் பிடிப்பவர்கள் நீர்தேக்கம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதாரணமாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ரோந்து பணிக்கு பயன்படுத்தி வந்த படகுகளை திருட்டு மீன் பிடிக்கும் கும்பல் இரவோடு இரவாக அடித்து நொறுக்கி சாத்தனூர் அணையில் மூழ்கடித்து உள்ளனர். இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது சாத்தனூர் அணை நீர்தேக்கத்தில் மீன்பிடி உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே சாத்தனூர் அணை நீர்த் தேக்க பகுதியில் திருட்டு மீன்பிடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story