கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர்கள் போராட்டம்; நோயாளிகள் அவதி
திருப்பூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
திருப்பூர்,
தகுதியின் அடிப்படையில் காலமுறையிலான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4–ந் தேதி (நேற்று) ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு டாக்டர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் நேற்று ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 300–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
தற்போது திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக சிகிச்சை பெற திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று காலை ஏராளமான புறநோயாளிகள் சிகிச்சை பெற திருப்பூர் தலைமை ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்து நின்றனர். ஆனால் வழக்கமான நேரத்தை கடந்தும் டாக்டர்கள் வரவில்லை. அப்போதுதான் டாக்டர்கள் போராட்டம் நடைபெறுவது குறித்து நோயாளிகளுக்கு தெரியவந்தது.
இதன் பின்னர் பயிற்சி மருத்துவர்கள் மூலம் புறநோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது ‘‘அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து பலமுறை தெரிவித்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அரசின் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (நேற்று) ஒரு நாள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை என்றால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.