மழை பெய்யும் போது அரசு பஸ்சுக்குள் குடை பிடித்து செல்லும் பயணிகள்; முறையாக பராமரிக்க கோரிக்கை
அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் மழை பெய்யும்போது பஸ்சுக்குள் பயணிகள் குடை பிடித்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே முறையாக பராமரிக்க வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடிபட்டி,
உடுமலையை அடுத்த கிழுவன்காட்டூர், பெருமாள்புதூர், மயிலபுரம், மடத்தூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கும், வெளியூர் செல்வதற்கும் அரசு பஸ்களை அதிக அளவில் நம்பி உள்ளனர். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் அதிக அளவில் அரசு பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் உடுமலையில் இருந்து கிழுவன்காட்டூர், பெருமாள்புதூர் வழியாக மடத்தூர் செல்லும் அரசு பஸ் முறையாக பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்குஉள்ளாகி வருகிறார்கள். மழை காலங்களில் பஸ்சுக்குள்ளே அருவி போல் கொட்டும் தண்ணீரில் இருந்து காத்துக்கொள்ள பஸ்சுக்குள்ளே குடை பிடித்தபடி பயணம் செய்ய வேண்டி உள்ளது.
உடுமலையில் இருந்து தடம் எண் 32 ஏ, பஸ் பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் மேற்கூரை சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர், உள்ளே கொட்டுகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 6 முறை இந்த பஸ் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பஸ் நேற்று காலை 8.30 மணிக்கு உடுமலை வந்து சேர்ந்தது. அப்போது மழை பெய்ததால் பஸ்சுக்குள் மழை ஒழுகியது. இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பஸ்சுக்குள்ளே குடை பிடித்தனர்.
மேலும் இந்த பஸ் அடிக்கடி பழுதாவதால் பஸ்சுக்கு காத்திருந்து விட்டு, பஸ் வராததால் அவசரமாக மாற்றுவழி தேடி ஓடவேண்டி உள்ளது. அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளுக்குநாள் பஸ்சின் மேற்கூரை சேதம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பயணிகளின் அவதி தொடர்கதையாக உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் உள்ள பஸ்சை முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் குறிப்பிட்டநேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களும், பயணிகளும் சேர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பயணிகள் தெரிவித்தனர்.