கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் சிவகங்கை கலெக்டரின் காரை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு
ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால், சிவங்கை மாவட்ட கலெக்டரின் காரை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காளையப்பன் நகரைச் சேர்ந்தவர் முகமதுகாசிம் (வயது 63). இவருக்கு சொந்தமாக காளையார்கோவில் சோமநாதமங்களத்தில் 3 ஏக்கர் 13 செண்டு இடம் இருந்தது. இந்த இடத்தினை வீடு இல்லாத ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டு மனை பட்டாவாக வழங்குவதற்கு ஆதிதிராவிட நலத்துறையினர் கையகப்படுத்தினர். இதற்காக கடந்த 1998–ம் வருடம் ஒரு செண்டு இடம் ரூ.136 என்று விலை நிர்ணயம் செய்து, ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.
இந்த தொகை குறைவாக இருப்பதாகவும், கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று கோரி முகமதுகாசிம் சிவகங்கை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 4.10.2016–ல் முகமதுகாசிமுக்கு ரூ.26 லட்சத்து 37 ஆயிரம் வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு கூறியபடி உரிய தொகையை ஆதிதிராவிட நலத்துறை வழங்கவில்லை. இதனால் மீண்டும் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை முகமதுகாசிம் தனது வக்கீல் மற்றும் கோர்ட்டு அமீனாவுடன், கலெக்டரின் காரை ஜப்தி செய்ய கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் காரில் வந்து இறங்கி, அலுவலகத்திற்கு சென்று விட்டார். டிரைவர் காரை வழக்கமான இடத்தில் நிறுத்தி பூட்டி சென்றார்.
இதனால் மாலை 5 மணி வரை கலெக்டரின் காரை ஜப்தி செய்யமுடியவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் கோர்ட்டு அமீனா, கலெக்டரின் காரில் ஜப்திக்கான உத்தரவை ஒட்டினார். பின்பு கலெக்டரின் காரை, தனியார் வாகனத்தில் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டரின் காரின் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் இடத்தின் உரிமையாளர் முகமது காலை முதல் அங்கேயே இருந்ததால் மயக்கமடைந்து விழுந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் இரவு 7 மணியளவில் கலெக்டர் அலுவலக பணியாளர்கள், கலெக்டர் அலுவலக வாயில் கதவை பூட்டி சென்றனர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள வந்த முகமதுகாசிம், கோர்ட்டு அமீனா ஆகியோர் கலெக்டரின் கார் அருகிலேயே இரவு முழுவதும் காத்திருந்தனர்.