கோவை காந்திபார்க் பகுதியில்: மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் - ‘வீடியோ’ சமூக வலைத்தளத்தில் பரவுகிறது
கோவை காந்திபார்க் பகுதியில் மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் திருடினார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோவை,
கோவை நகரில் இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து வருகிறது. கோவை உள்பட பல்வேறு இடங்களில் 150 இருசக்கர வாகனங்களை திருடி, தனியார் பஸ்களில் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளுக்கு அனுப்பி பலருக்கு விற்ற 4 பேர் கொண்ட கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதானது. இந்த நிலையில் கோவையில் மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் திருடும் ‘வீடியோ’ சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கோவையில் காந்திபார்க் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலை ஓரம் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு 2 வாலிபர்கள் சிறிது நேரம் சுற்றித்திரிந்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் ஒரு மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்தை காலால் எட்டி உதைத்து பூட்டை உடைக்கிறார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்தில் ஒயர்களை வெட்டி திருடிச் செல்ல தயார் செய்கிறார். மேலும் அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை செல்போனில் படம் எடுக்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்கிறார். ஸ்டார்ட் செய்ய முடியாததால் மோட்டார் சைக்கிளில் ஏறி காலால் உதைத்தபடியே செல்கிறார். அதை தொடர்ந்து மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, ‘அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் மூலம் 2 வாலிபர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. 20 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள். இவர்கள் குறித்து பொதுமக்களும் தகவல் தெரிவிக்கலாம்’ என்றனர்.
Related Tags :
Next Story