உரம், பூச்சி மருந்து தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்


உரம், பூச்சி மருந்து தட்டுப்பாட்டை நீக்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2018 12:11 AM GMT (Updated: 5 Dec 2018 12:11 AM GMT)

காரைக்கால் மாவட்டம் முழுவதும் யூரியா மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இவற்றை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், காமராஜர் அரசு வளாகத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சார்பு கலெக்டர் விக்ராந்த்ராஜா, கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை கலெக்டர் கேசவன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, பெரும்பாலான விவசாயிகள் பேசியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தின் பல பகுதிகளில் ‘கஜா’ புயலால் சாய்ந்த மரங்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை எளிமையாக்க வேண்டும். ஏரி, குளங்களில் அதிகப்படியான கோரைகள் வளர்ந்துள்ளன. அவற்றை 100 நாள் வேலை செய்யும் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்ய வேண்டும். காரைக்கால், திருநள்ளாறு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஓட்டல்களில் மீதியாகும் உணவு பொருட்கள், இலைகளை இரவு நேரத்தில் சிலர் சாலையோரம் கொட்டுவதால், பன்றி மற்றும் கால்நடைகளின் தொல்லை அதிகமாகி வருகிறது. இன்னும் ஒரு சிலர் அந்த குப்பைகளை விளைநிலங்களிலும் கொட்டுவதால்விளைநிலங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மூலம் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓடுதுறை மற்றும் ஆற்றங் கரையோரம், இரவு நேரத்தில் மணல் திருட்டு நடைபெறுவதால் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும். காரைக்காலில் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலத்தில் காட்டுக் கருவை செடி வளர்ந்துள்ளது அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். காரைக்கால் மாவட்டம் முழுவதும் யூரியா மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இவற்றை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கூட்டத்தில், கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன் பேசியது:-

தற்போது உரம் மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகள் வெளியே வாங்கும் யூரியா பூச்சி மருந்துக்கான ரசீதுகளை வேளாண்துறையில் சமர்ப்பித்தால், அவர்களது வங்கி கணக்கில் அதற்கான பணம் செலுத்தப்படும்.

Next Story