கோவை அருகே: கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது
கோவை அருகே கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது. அந்த சிறுத்தைப்புலி தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவை,
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மலையடிவார பகுதியை சேர்ந்தது சென்னனூர். இங்கு கடந்த நவம்பர் மாதத்தில் 2 குட்டிகளுடன் ஒரு சிறுத்தைப்புலி புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. பின்னர் அந்த சிறுத்தைப்புலி அடிக்கடி ஊருக்குள் வர தொடங்கியதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பீதியடைந்தனர்.
எனவே அச்சுறுத்தும் சிறுத்தைப்புலியை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் உத்தரவின்பேரில், மதுக்கரை வனச்சரக அதிகாரி செந்தில்குமார் மேற்பார்வையில் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது அங்கு சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருந்தன.
இதையடுத்து அங்கு கூண்டு வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சிறுத்தைப்புலி வரவில்லை. ஆனால் ஆலாந்துறை அருகே உள்ள மலையடிவார கிராமமான மோளபாளையத்தில் சிறுத்தைப்புலி குட்டிகளுடன் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. எனவே சென்னனூரில் இருந்த கூண்டை எடுத்து மோளபாளையம் பகுதியில் வனத்துறையினர் வைத்தனர்.
அந்த கூண்டுக்குள் தினமும் இரவில் மட்டும் நாயை வனத்துறையினர் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மோளபாளையம் பகுதியில் சிறுத்தைப்புலி உறுமல் சத்தம் கேட்டது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனச்சரக அதிகாரி செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது கூண்டுக்குள் ஒரு சிறுத்தைப்புலி சிக்கி இருந்தது. அது வனத்துறையினரை பார்த்ததும் ஆக்ரோஷத்துடன் உறுமியது. இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிறுத்தைப்புலியை பார்ப்பதற்காக அங்கு திரண்டனர்.
அவர்களை வனத்துறையினர் கூண்டின் அருகில் அனுமதிக்கவில்லை. நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதை தொடர்ந்து அந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடுவிக்க முடிவு செய்தனர்.
இதனால் சிறுத்தைப்புலியுடன் அந்த கூண்டை லாரியில் ஏற்றி தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள ஒரு பகுதியில் வைத்து கூண்டை திறந்து விட்டனர். அப்போது அந்த சிறுத்தைப்புலி கூண்டிற்குள் இருந்து வெளியே குதித்து வனப்பகுதியை நோக்கி ஓடியது. இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மோளபாளையம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது ஆண் சிறுத்தைப்புலி ஆகும். அதற்கு 4 வயது இருக்கும். தற்போது இந்த சிறுத்தைப்புலி சிக்கி உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். எனினும் 2 குட்டிகளுடன் சிறுத்தைப்புலி நடமாடியதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதால், வேறு சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் அங்கு உள்ளதா? என்பதை கண்காணித்து வருகிறோம்.
பொதுவாக சிறுத்தைப்புலியை பிடிக்க வைக்கப்படும் கூண்டில் 2 அறைகள் இருக்கும். ஒரு அறை சிறியதாகவும், மற்றொரு அறை பெரியதாகவும் இருக்கும். சிறிய அறையில் இரையாக நாய் வைக்கப்படும். கூண்டுக்குள் இரை இருப்பதை பார்க்கும் சிறுத்தைப்புலி அதனை பிடிக்க கூண்டுக்குள் பாயும். அப்போது கூண்டு அசையும்போது 2 அறைகளின் கதவும் ஒரே நேரத்தில் மூடிவிடும்.
அந்த கூண்டுக்குள் சிக்கும் சிறுத்தைப்புலியால் இரையையும் பிடிக்க முடியாது. வெளியேயும் வர முடியாது. அப்படிதான் இந்த சிறுத்தைப் புலியும் இரையாக வைக்கப்பட்டு இருந்த நாயை பார்த்ததும் கூண்டிற்குள் சென்றபோது சிக்கி உள்ளது. இரையாக வைக்கப்பட்ட நாயும் தப்பித்துவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story