முத்துப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வு


முத்துப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 5:30 PM GMT)

முத்துப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

முத்துப்பேட்டை,


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களும், பயிர்களும் கஜா புயலால் சேதமடைந்தன.

இந்தநிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மைதுறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மத்திய தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் வேளாண்மைதுறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன், வேளாண் ஆணையர் மூர்த்தி, தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் (பொறுப்பு) பாலசவுந்தரி ஆகியோர் அடங்கிய வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் நேற்று முத்துப்பேட்டை வந்தனர். முன்னதாக விருந்தினர் மாளிகையில் விவசாய சங்க பிரதிநிதி காவிரி ரெங்கநாதன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் இவர்கள் ஆலோசனை நடத்தினர்.


பின்னர் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் பகுதியில் புயலால் தென்னை மரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டனர். அப்போது விவசாயிகளான ரெங்கசாமி, அருண் ஆகியோர் புயலால் சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னையை இழந்த விவசாயிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். தென்னை பராமரிப்புக்காக இலவச மின்சாரம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என அவர்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.


பின்னர் ககன்தீப் சிங் பேடி மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இனிவரும் நாட்களில் ஒரு தென்னையை வளர்த்து பலன் பெறுவதென்றால் 7 ஆண்டுகள் ஆகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தரப்பில் எவ்வளவு உதவி செய்தாலும் நன்றாக தான் இருக்கும். நிறைய விவசாயிகள் தென்னையை மட்டும் நம்பியுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்திற்காக என்ன உதவமுடியுமோ அதை செய்வோம். ஏற்கனவே மத்திய குழுவினர் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு அறிக்கை அளித்துள்ளனர்.


நாங்களும் எங்களது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பித்து விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வோம். தென்னை இழப்பிற்கு தொழில்நுட்ப ரீதியாக என்ன உதவி செய்ய முடியுமோ அதையும் அரசுக்கு பரிந்துரைப்போம். இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளோம்.

தஞ்சை, திருவாரூர் பகுதி ஆய்வுக்கு பின்னர் நாகை பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அறிக்கை தயார் செய்து அரசுக்கு தெரிவிக்கப்படும். தென்னை விவசாயிகள் மறுவாழ்வுக்கு என்ன செய்யலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்ச இழப்பீடு நிவாரணம் கிடைக்க பரிந்துரைக்கப்படும்.

கஜா புயலால் பெருமளவில் தென்னை, மா, பலா, தேக்கு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாய்ந்துள்ளன. அவற்றையெல்லாம் பார்வையிட்டு அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விவசாய சங்க பிரதிநிதிகளிடமும் புயல் பாதிப்பு நிவாரணம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story