கடனை கேட்டு திட்டியதால் விஷம் குடித்து டிரைவர் சாவு; தொழிற்சாலை ஊழியர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கடனை கேட்டு திட்டியதால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக தொழிற்சாலை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள சின்ன கொக்குபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 62). ஓய்வுபெற்ற தனியார் பஸ் டிரைவர். இவர் கடந்த மாதம் 28–ந் தேதி வீட்டில் இருந்தபோது வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை உடனடியாக உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து கிருஷ்ணனின் மகன் சுரேஷ் (32) ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
நான், நில விற்பனை சம்மந்தமாக காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியரான சிகாமணிக்கு (44) ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் தர வேண்டி இருந்தது. இது தொடர்பாக 2 மாதங்களில் 2 தவணையாக பணத்தை திருப்பி தருவதாக சிகாமணியிடம் எனது தந்தை கூறியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 28–ந் தேதி எனது வீட்டுக்கு வந்த சிகாமணி, ‘எனது தந்தை கிருஷ்ணனிடம் தரக்குறைவாக பேசியதோடு மட்டுமன்றி நீ உயிரோடு இருப்பதை விட சாவதே மேல்’ என்று கூறினார்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் எனது தந்தை கிருஷ்ணன், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். எனது தந்தையின் தற்கொலைக்கு காரணமான சிகாமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனின் தற்கொலைக்கு காரணமான தனியார் தொழிற்சாலை ஊழியர் சிகாமணியை நேற்று இரவு கைது செய்தனர்.