மாவட்டத்தில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு


மாவட்டத்தில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 4:00 AM IST (Updated: 6 Dec 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிதி வசூல் செய்தனர். அவர்கள் வசூலித்த 23 ஆயிரத்து 345 ரூபாயில், 25 தார்பாய்களை வாங்கி தலைமை ஆசிரியர் மகேந்திரனிடம் கொடுத்தனர்.

அவற்றை தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் ஒப்படைத்து புயலால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளிகள் துணை ஆய்வாளர் ஜெயராமன், பெற்றோர் சங்க தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான சோப்பு, பிரஷ், டவல், லுங்கி, பெட்சீட், கம்பளம் போன்ற பொருட்களும் அரிசி, பருப்பு, மைதா, கோதுமை மாவு, எண்ணெய், பிஸ்கட், பிரட் போன்ற உணவு பொருட்களையும் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்டன.

இந்த நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பொருட்கள் புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா மற்றும் ஆலங்குடி கிராம பொதுமக்களுக்கு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் வழங்கினார்.

அப்போது மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் வக்கீல் நாகராஜ், முன்னாள் மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், விவசாய அணி செயலாளர் வேங்கன், நகர செயலாளர் சிவானந்தம், பொருளாளர் சேட்டுகுமார், இளைஞர் அணி முருகன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், முன்னாள் கவுன்சிலர் விஜய குமார், பொதுகுழு உறுப்பினர் கண்ணன், சிக்னல் ஆறுமுகம், எல்.எல்.ராமு முன்னாள் தொகுதி செயலாளர் திருஞானம், பனை வெல்ல கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story