பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:21 PM GMT)

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு தென்னை, மாமரங்கள், வாழை, முந்திரி, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருக்குவளை, மேலப்பிடாகை, கீழையூர் உள்பட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்களும் காற்றின் வேகத்தால் தண்ணீரில் மூழ்கின. அவ்வாறு மூழ்கிய நெற்கதிர்களை பல்வேறு சிரமங்களை தாண்டி விவசாயிகள் அறுவடை செய்து வந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நாகையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்த நிலையில் கஜா புயல் காரணமாக அவைகள் சேதமடைந்தன. சில இடங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்கள், தண்ணீரில் மூழ்கின. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டதுடன், சிரமத்துடன் சாய்ந்த நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர்.

நாகையை அடுத்த செல்லூர், பாலையூரில் விவசாயிகள் நேரடி மற்றும் நடவு மூலம் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் துளிர் விடும் நிலையில் உள்ளன. இந்தநிலையில் புயலினால் இந்த பயிர்களும் பாதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் களைக்கொல்லி, பூச்சி மருந்து மற்றும் உரம் உள்ளிட்டவற்றை தெளித்து பயிர்களை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்னும் சில தினங்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எனவே வரும் காலங்களில் பயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து வரும் காலங்களில் புயல் மழை போன்ற இயற்கை சீற்றத்தில் நெற்பயிர்கள் சேதமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் விவசாயிகள் சிரமமன்றி தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story