வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி: ரூ.77 லட்சம் மோசடி செய்த பெண் கைது - தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி: ரூ.77 லட்சம் மோசடி செய்த பெண் கைது - தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Dec 2018 10:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:57 PM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையை அடுத்த கணபதி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி நாகம்மை (வயது 53). இவருடைய மகன் பிரபாகரன் (28). இவர் சாய்பாபா காலனி கே.கே.புதூரில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையை சேர்ந்த வித்யாஸ்ரீ என்பவர் மேலாளராக இருந்தார்.என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அயர்லாந்து நாட்டில் வேலை வாங்கி கொடுக்கப்படும் என்று ஆன்லைனில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை பார்த்த கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களிடம் பேசிய நாகம்மை, ரூ.3½ லட்சம் கொடுத்தால்போதும், அயர்லாந்து நாட்டில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

அதை நம்பிய 22 பேர் தலா ரூ.3½ லட்சம் வீதம் ரூ.77 லட்சம் செலுத்தி உள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் வாங்கி உள்ளார். சில நாட்களில் அவர்களுக்கு உடல்தகுதி தேர்வும் நடந்தது. பின்னர் ஒரு வாரத்துக்குள் அயர்லாந்து செல்ல விசா வந்துவிடும், நீங்கள் செல்லலாம் என்று நாகம்மை, பிரபாகரன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி விசா வரவில்லை.பணம் செலுத்தியவர்கள் பல நாட்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, ஓரிரு நாட்களில் விசா வந்து விடும் என்றே கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் எங்களுக்கு வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை, நாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து உள்ளனர்.

இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் நாகம்மை, பிரபாகரன், வித்யாஸ்ரீ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவை கண்ணப்பன் நகரில் பதுங்கி இருந்த நாகம்மையை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபாகரன், வித்யாஸ்ரீ ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story