தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்


தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 8:13 PM GMT)

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடிப்பட்டி,

கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இணையதள வசதி செய்து தர வேண்டும், மாவட்ட கலந்தாய்வு ஒரேநாளில் நடத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரவுநேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவுநேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிவரை நடைபெறும் என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.

வாடிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். கோட்ட துணைத்தலைவர் பாலகண்ணன் முன்னிலை வகித்தனர். வட்டகிளைத்தலைவர் கெங்கராஜ் வரவேற்றார். இந்த போராட்டத்தை மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் தொடங்கிவைத்து விளக்கி பேசினார். இதில் மாவட்டகூட்டுறவுசங்கதலைவர் பாண்டி, வட்டகிளைபொருளாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் செந்தில்குமார், முகிலன், ஜெயராஜ், முருகேசன் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் வட்டகிளைசெயலாளர் மணிவேல் நன்றிகூறினார்.

திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டார தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். இதில் 53 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று பேரையூர் தாலுகா அலுவலகத்தில் 40 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story