அடிப்படை வசதிகள் கேட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


அடிப்படை வசதிகள் கேட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கூறி சேலத்தில் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சேலம், 

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறி அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று இரவு சேலம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சேலம் வட்ட தலைவர் கலையரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணை மூலம் வழங்க வேண்டும். வரும் காலத்தில் மாவட்ட மாறுதலை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

கணினி வழி சான்றுகள், இணைய தள பணிகளுக்கு ஆகும் செலவுத்தொகையை அரசு வழங்க வேண்டும். தனிச்சிறப்பு ஊதியம் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு கழிப்பிடம், மின்சாரம் என அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று வ லியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இது குறித்து அவர்கள் கூறும் போது எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி இன்று (நேற்று) இரவு 8 மணி முதல் நாளை (இன்று) காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், 10-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

இதே போன்று காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கீர்த்தி அறிவழகன், மெய்யழகன், மாரியப்பன் சுகவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் மாரி, செயலாளர் கூட்டத்தாழ்வார், பொருளாளர் பாரதி நிர்வாகிகள் சவுரிராஜன், ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று வாழப்பாடி, கெங்கவல்லி தாலுகா அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story