நிவாரண உதவி கேட்டு தாலுகா அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நிவாரண உதவி கேட்டு தாலுகா அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 9:32 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண உதவி கேட்டு தாலுகா அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். குடிசைகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கியுள்ள வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி தொடங்கி வைத்து பேசினார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் அண்ணாமலை பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் திரளான பெண்கள் உள்பட விவசாயிகள் மற்றும் விவசாய தொழி லாளர்கள் கறம்பக்குடி தாசில்தார் சக்திவேலிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மாடுகளை இழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனு கொடுக்க ஏராளமானவர்கள் திரண்டு வந்ததால் தாசில்தார் அலு வலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சாத்தையா, விவசாய சங்கத்தின் ஒன்றியத்தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச்செயலாளர் பிச்சை, ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கஜா புயலால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க கோரி கோஷமிட்டனர். இதில் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் புயல் நிவாரணம் கேட்டு குடிசைகளை இழந்த பொதுமக்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட தலைவர் ராமையன் ஆகியோர் தலைமையில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் ஆரமுததேவசேனா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட தாசில்தார் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் அனைவரும் மனுவை தாசில்தாரிடம் கொடுத்து விட்டு சென்றனர்.

இதேபோல் ஆவுடையார்கோவில் கடைவீதியில் விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க செயலாளர் கலந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கோஷம் எழுப்பப்பட்டது.

Next Story