பண்ருட்டி அருகே பரபரப்பு: மணல்குவாரியை அரசியல் கட்சியினர் முற்றுகை - வேல்முருகன் தலைமையில் போராட்டம்


பண்ருட்டி அருகே பரபரப்பு: மணல்குவாரியை அரசியல் கட்சியினர் முற்றுகை - வேல்முருகன் தலைமையில் போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 6 Dec 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே மணல் குவாரியை அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதில் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடந்தது.

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அருகே உள்ளது எனதிரிமங்கலம். இங்குள்ள பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரிக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்தது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு அளித்தனர்.

அதன்படி நேற்று எனதிரிமங்கலம் அரசு மணல் குவாரி முன்பு பல்வேறு கட்சியினர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் சுரேந்தர், தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் துணை தலைவர் தங்கராசு, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெய்சங்கர், வெங்கடேசன், மக்கள் பாதுகாப்பு கவசம் தட்சணாமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வெங்கடசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சவுகத்அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

‘எனதிரிமங்கலத்தில் உள்ள பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதால் நீர் வளம் குன்றி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர். மணல் குவாரிக்கு ஒட்டுமொத்த அதிகாரிகளும் துணை நிற்கின்றனர். பொன்விளையும் பூமியில் இயற்கை வளத்தை அடியோடு அழிக்க எந்திரம் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.

மக்கள் எதிர்ப்பை மீறி மணல் அள்ளுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே குவாரியை உடனே மூடவேண்டும். இல்லையெனில் மாவட்ட கலெக்டரின் வீடு மற்றும் அலுவலகம் முன்பாக சமையல் செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதையும் மீறி மணல் குவாரி நடந்தால் தமிழக முதல்-அமைச்சரின் வீட்டின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணல் குவாரியை மூடக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இருப்பினும் கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த தாசில்தார் ஆறுமுகம், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் ஆகியோர் வேல்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பிரச்சினை பற்றி மாவட்ட கலெக்டரிடம் நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்று தாசில்தார் கூறினார். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் தி.மு.க., த.வா.க, ம.தி.மு.க., அ.ம.மு.க, தே.மு.தி.க, மக்கள் பாதுகாப்பு கவசம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story