‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டப்படும் வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க உத்தரவாதம் அளிக்க முடியாது கருத்துகேட்பு கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தகவல்


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டப்படும் வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க உத்தரவாதம் அளிக்க முடியாது கருத்துகேட்பு கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2018 4:30 AM IST (Updated: 6 Dec 2018 10:14 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்படும் வணிகவளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க உத்தரவாதம் அளிக்கமுடியாது என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 752 நிரந்தர கடைகளும், 300 தற்காலிக கடைகளும் உள்ளன. தற்போது வேலூர் மாநகராட்சி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் நேதாஜி மார்க்கெட் கடைகளை இடித்துவிட்டு அடுக்குமாடி வணிகவளாகம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது. அதன்படி 2 அடுக்குகள் கொண்ட கட்டிடமாக மார்க்கெட் கட்டப்பட இருக்கிறது.

புதிதாக கட்டப்படும் கடைகளை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் இங்கு ஏற்கனவே கடைவைத்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் வியாபாரிகள், அவர்களை நம்பி வாழும் 5 ஆயிரம் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனவே புதிதாக மார்க்கெட் கட்டப்பட இருப்பதையொட்டி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகளிடத்தில் கருத்து கேட்கும் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் நேதாஜி மார்க்கெட் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ஞானவேல், துணைத்தலைவர் எல்.கே.எம்.பி.வாசு, செயலாளர் பிச்சாண்டி, பொருளாளர் மனோகரன் மற்றும் அனைத்து வியாபாரிகள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

அப்போது புதிதாக கட்டப்பட இருக்கும் மார்க்கெட் கட்டிடம் 2 அடுக்குகளை கொண்டதாக வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சென்னை போன்ற பெருநகரங்களுக்குதான் ஏற்றதாக இருக்கும். மாவட்ட தலைநகரங்களுக்கு இது சாத்தியப்படாது. சாரதி மாளிகையில் 2-வது தளத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் இன்றி மூடப்பட்டுள்ளது. இங்கு சமூகவிரோத செயல்கள்தான் நடக்கிறது. எனவே அனைத்து கடைகளும் ஒரே தளத்தில் வரும்படி கட்டிடத்தை கட்டவேண்டும்.

மேலும் 300 தற்காலிக கடைகள் தற்போதுள்ள பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு வருடத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறார்கள். எனவே அவர்களையும் பட்டியலில் சேர்த்து வரைபடத்தை மாற்றியமைக்க வேண்டும்.

பழைய மீன் மார்க்கெட்டையும் நேதாஜி மார்க்கெட்டுடன் இணைத்து அங்குள்ள தரைதளத்தில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி சட்டத்தில் சட்ட திருத்தம் செய்து, நேதாஜி மார்க்கெட்டில் கடைவைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கடைகள் கட்டும்வரை எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித்தரவேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் கடைகள் கட்டிமுடிக்கப்பட்டதும் ஏல முறையில் கடைகள் ஒதுக்காமல், ஏற்கனவே கடைவைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் கடையை காலிசெய்வோம். கடைஒதுக்கவில்லை என்றால் 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதிலளித்த மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் சட்டத்தை திருத்தும் அதிகாரம் நமக்கு கிடையாது. எனவே உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறினார். உடனே வியாபாரிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாகக்கூறி எழுந்தனர். அவர்களை கலெக்டர் ராமன் சமாதானம் செய்து அமரவைத்தார்.

அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் வைக்கப்பட்ட பிறகு 2 வியாபாரிகள் இறந்துள்ளனர். அதேபோன்று ஏலமுறையில் கடைகள் ஒதுக்கீடு செய்தால் தற்கொலை சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே வியாபாரிகள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பரிசீலனை செய்வதாக கலெக்டர் கூறினார்.

Next Story