மாவட்ட செய்திகள்

வாங்காத கடனுக்காக உதவித்தொகை பிடித்தம்: வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் + "||" + For unpaid loans Scholarship: The general strike against the bank

வாங்காத கடனுக்காக உதவித்தொகை பிடித்தம்: வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வாங்காத கடனுக்காக உதவித்தொகை பிடித்தம்: வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரம் அருகே வாங்காத கடனுக்காக உதவித்தொகையை பிடித்தம் செய்ததாக கூறி வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலமாக 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை, முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 140 பேர் வங்கியில் கடன் வாங்கியிருப்பதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி அந்த கடனுக்கு பதிலாக அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகையை கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக வங்கி அதிகாரிகள் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து நேற்று அப்பகுதி பொதுமக்கள், அந்த வங்கிக்கு திரண்டு வந்து திடீரென வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் வங்கியில் கடன் வாங்கியிருப்பதாகக்கூறி எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகையை பிடித்தம் செய்துள்ளனர். ஒவ்வொரு நபருக்கும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வழங்காமல் பிடித்தம் செய்து வைத்துள்ளனர். நாங்கள் இந்த வங்கியில் கடன் பெறவில்லை. மகளிர் சுய உதவிக்குழுவில் கையெழுத்துபோட்டதை வைத்து எங்கள் பெயரில் யாரோ கடன் வாங்கியிருக்கின்றனர்.

இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு உரிய பதில் தரவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்கப்பட்ட அரசு உதவித்தொகையில் பிடித்தம் செய்த தொகையை மீண்டும் எங்களது வங்கி கணக்கிலேயே வரவு வைக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.