சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாங்குநேரி தாசில்தார் கைது
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாங்குநேரி தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி,
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாங்குநேரி தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மினிபஸ் உரிமையாளர்
நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது 50), மினிபஸ் உரிமையாளர். இவருக்கு சொந்தமான மினிபஸ் நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். வேறு வழித்தடத்தில் மினிபஸ் இயக்க அனுமதி பெற வேண்டுமானால் அதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படும்.
ரூ.25 ஆயிரம்
இந்த நிலையில், சொத்து மதிப்பு சான்றிதழ் பெறுவதற்காக நாங்குநேரி தாசில்தார் வர்க்கீசை பால்துரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் சான்றிதழ் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பால்துரை இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், தாசில்தார் வர்க்கீசை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.25 ஆயிரத்தை பால்துரையிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தாசில்தார் கைது
போலீசாரின் அறிவுரைபடி, பால்துரை நேற்று மாலை நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு சென்று, தாசில்தார் வர்க்கீசிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வர்கீஸ் வாங்கியவுடன் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி மற்றும் போலீசார் கையும், களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மாலை 3.45 மணி முதல் 6.45 மணி வரை இந்த ஆய்வு நடந்தது. அப்போது, அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற ஊழியர்கள் யார்? யார்? என்பது குறித்தும், லஞ்சம் வாங்கும் நோக்கத்தில் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.
வீட்டில் சோதனை
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, ‘கைது செய்யப்பட்ட வர்க்கீசின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். அங்கு அவரது வீட்டில் நாளை (அதாவது இன்று) சோதனை நடத்த உள்ளோம்’, என்று தெரிவித்தனர்.
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க மினிபஸ் உரிமையாளரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story