ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பண்டாரம்பட்டி கிராம மக்கள் தர்ணா போராட்டம்


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பண்டாரம்பட்டி கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 9:45 PM GMT (Updated: 6 Dec 2018 7:12 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்ணா போராட்டம்

தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் நேற்று காலை திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வக்கீல் அரிராகவன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

சிறப்பு சட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக நடந்த போராட்டத்தில் 13 பேரை பலிகொடுத்து உள்ளோம். ஆனாலும் எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறவில்லை. தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியது. அந்த அரசாணையை யாரும் தடுக்க முடியாது, ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்று கூறினார்கள்.

தற்போது ஒய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆலையை திறப்பதற்கு ஏதுவான அறிக்கையை அளித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு தாமிர தொழிலை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மக்களுக்காக குரல் கொடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story