பாபர் மசூதி இடிப்பு தினம்: நாகர்கோவிலில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: நாகர்கோவிலில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 4:30 AM IST (Updated: 7 Dec 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலத்தை அகற்ற வேண்டும், அதே இடத்தில் மீண்டும் பாபர் மசூதியை கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குமரி மாவட்ட தலைவர் காஜாமைதீன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செய்யது இஸ்ஹாக் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஜாகீர் உசேன், மாவட்ட செயலாளர் ஜெகுபர் அலி மற்றும் தொகுதி, நகர தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அகமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர் சுல்பிகர் அலி, பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி தலைவர் தாஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மாகீன் அபுபக்கர், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை உயர்மட்டக்குழு ஆலோசகர் ஜார்ஜ் பொன்னையா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

போராட்டத்தில் பெண்கள் ஏராளமானோர் கைக்குழந்தைகளுடன் வந்து பங்கேற்றனர். சிறுவர்- சிறுமிகளும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் குமரி மாவட்ட த.மு.மு.க. சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அன்வர் உசேன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் செய்யது அலி முன்னிலை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், த.மு.மு.க. தலைமைக்கழக பேச்சாளர் ரிஸ்வான், மாநில செயற்குழு உறுப்பினர் காதர்மொய்தீன், மாவட்ட பொருளாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முடிவில் அன்வர் சதாத் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சில பெண்களும், சிறுவர்- சிறுமிகளும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கறுப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

இந்த போராட்டங்களையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story