சேலம் அருகே, 35 அடி உயரமுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை முயற்சி
சேலம் அருகே ஒருதலைக்காதலால் 35 அடி உயரமுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருப்பூர்,
சேலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாமன்கரடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் பிரபு (வயது 25), கூலித் தொழிலாளி. பிரபு நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் சுமார் 35 அடி உயரமுள்ள அந்த தொட்டியின் மேல் பகுதிக்கு சென்றார். பின்னர் பிரபு தன்னுடைய மாமா செல்வத்துக்கு போன் செய்து, எனக்கு வாழ விருப்பம் இல்லை, இதனால் குடிநீர் தொட்டியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போகிறேன். எனவே நீ வந்து என்னுடைய செல்போனை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வம் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பிரபு தொட்டியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் கழுத்து, கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்த பிரபு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறும் போது, பிரபு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காதல் தோல்வி அடைந்த பிரபு மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story