நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை


நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2018 9:30 PM GMT (Updated: 6 Dec 2018 7:52 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

மானூர், 

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

சத்துணவு அமைப்பாளர்

மானூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் முத்துமாரி (வயது 27). இவர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருந்தார். இவருக்கும், ராமையன்பட்டி சிவாஜிநகரை சேர்ந்த பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளியான மகராஜன் என்ற சுடலைமுத்துக்கும் (29) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முத்துமாரி தனது கணவரை பிரிந்து தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முத்துமாரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானூர் போலீசார், முத்துமாரியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்துமாரிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.

மற்றொரு சம்பவம்

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 34). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணவேணி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும், காருக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தனது மனைவியை பிரிந்து கிருஷ்ணவேணியுடன் குடும்பம் நடத்தி வந்தார். அவர்கள் களக்காடு அருகே உள்ள புலவன்குடியிருப்பு கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணவேணியை அவருடன் குடும்பம் நடத்தி வருபவரின் மனைவி மற்றும் உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த கிருஷ்ணவேணி கோழிப்பண்ணையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story