சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்


சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 8:01 PM GMT)

சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்து பேசினார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் மதுபானங்கள் மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட மேலாளர் (பொது) குதரதுல்லா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் மதுபானங்கள் மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், பேரணிகள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தொடர்ந்து விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்திடவும், மதுபானம், சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளம்பர பலகைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மதுபானம் மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், காகிதம் மற்றும் துணியால் செய்யப்பட்ட விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்குகளில் மாணவ-மாணவிகளை பங்குபெற செய்தல், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மது மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை கல்வித்துறையின் மூலம் நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுபானம் மற்றும் சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள காவல்துறைக்கு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 21 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை மாவட்ட வன அலுவலர் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகளை சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர்கள் தலைமையில் நடத்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story