ஆண்டிப்பட்டி அருகே: அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்


ஆண்டிப்பட்டி அருகே: அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 9:13 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி ஒன்றியம் தெப்பம்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக, மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமங்களை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய சிலர் திருட்டுத்தனமாக மணலை அள்ளி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

இதனையடுத்து கனிமவளத்துறை சார்பில் ஜி.உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தனது நிலத்தில் மணல் அள்ளி விற்பனை செய்ய அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் அந்த அனுமதி சீட்டை, வேறு ஒரு நபருக்கு அவர் விற்று விட்டதாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தி, அனுமதி பெறாத சிலர் தங்களது பட்டா நிலத்தில் இரவு, பகலாக மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர்.

வரைமுறையின்றி மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரித்தாவிடம் புகார் செய்தனர். அதன்பேரில் தெப்பம்பட்டி பகுதிக்கு ஆர்.டி.ஓ. தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று நேரடியாக வந்தனர். பின்னர் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிற தனியார் நிலத்தை அவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த 2 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை தாசில்தார் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்டிப்பட்டி தாசில்தார் அர்ச்சுணன் மற்றும் நில அளவைத்துறையினர் மூலம், அனுமதியின்றி மணல் அள்ளப்பட்ட இடங்கள் அளவீடு செய்யப்பட்டன.

எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை கணக்கீடு செய்து, அதற்கு ஏற்ப அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் கடந்த சில தினங்களாக, அனுமதியின்றி மணல் அள்ளுவதை கண்டுகொள்ளாமல் இருந்த வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story